yadavakonar
  மாவீரன் அழகு முத்துக்கோன்
 


தாய் மண்ணின் உரிமைக்காகவும் சுதந்திரத்திற்காகவும் போராடிய மாவீரன் அழகுமுத்துக்கோனை நேருக்கு நேர் சந்திக்க பயந்த கும்பினியப்படை, அவனது கைகளிலும் கால்களிலும் விலங்குகளைப் பூட்டி, பீரங்கிக்கு முன்னால் நிறுத்தியது. அவனைப் போலவே கைகளில் பூட்டப்பட்ட விலங்குகளோடு அவனது ஆறு துணைத் தளபதிகளும் 248 வீரர்களும் நிறுத்தப்பட்டார்கள். ``எங்களை எதிர்ப்போர்க்கு இதுதான் கதி என்று கும்பினிப்படை எக்காளமிட்டபடி அவர்களை சுற்றிச்சுற்றி வந்தது. `ம்' என்றால் பீரங்கிகள் முழங்கும். அழகுமுத்துக்கோனும் அவனது வீரர்களும் உடல் சிதறிப் போவார்கள். அதைப் பொறுக்கமாட்டாமல்தான் அன்றைய நடுக்காட்டுச் சீமை பாளம்பாளமாய் வெடித்து சுட்டு எரித்துக்கொண்டிருந்தது. ``மன்னிப்புக் கேட்டால் இக்கணமே விடுதலை; வரி கொடுக்க சம்மதித்தால் உயிர் மிஞ்சும் என்று கும்பினிப்படை எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், ``தாய் நாட்டின் மானத்துக்காக மரணத்தை முத்தமிடவும் நாங்கள் தயார் என்ற அழகுமுத்துக் கோனின் கர்ஜனையைக் கேட்டு கும்பினிப்படை அதிர்ந்தது. ஆத்திரம் கொண்டது இருநூற்று நாற்பத்தெட்டு வீரர்களின் தோள்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டன. நிறுத்தி வைக்கப்பட்ட ஏழு பீரங்கிகளின் வாயில் இடப்பக்கம் மூன்று தளபதிகளையும் வலப்பக்கம் மூன்று தளபதிகளையும் நடுவில் வீரன் அழகுமுத்துக்கோனையும் நிறுத்தினார்கள்.

பீரங்கிகள் வெடித்துச் சிதறின. வீர மைந்தர்களின் ரத்தத்தால் நனைந்தது நடுக்காட்டுச் சீமை. இந்தியாவின் விடுதலைக்காக தன் இன்னுயிரை முதல் காணிக்கையாக்கி இந்திய விடுதலை வரலாற்றின் முதல் பக்கத்தில் இடம்பிடித்துக் கொண்டார் வீரன் அழகுமுத்துக்கோன். தாய்மண்ணை அடிமைப்படுத்த நினைத்த ஆதிக்க சக்திகளுக்கு எதிராக சுதந்திர முழக்கமிட்ட வீரனைத் தந்து, யாதவ சமூகம் பெருமை தேடிக் கொண்டது.

மாவீரன் அழகுமுத்துக்கோன் வரலாறு வெளிவந்த தகவல்

மாவீரன் அழகுமுத்துக்கோன் பற்றிய வரலாறு உலகறிய பல்வேறு தரப்பினர் உதவி இருக்கின்றார்கள். அதைப்பற்றி கீழ் கொடுக்கப்பட்டுள்ள கட்டுரையில் விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 1959ஆம் ஆண்டு பந்துலு இயக்கிய வீபாண்டிய கட்டபொம்மன் என்கிற திரைப்படம் வெளிவந்தது. அப்போது இந்த திரைப்படத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனை காட்டி கொடுத்த பாத்திரமான எட்டப்பன் பிறந்த கிராமமான எட்டயபுரம் பற்றி மிகவும் இழிவாக காட்டப்பட்டது. இதை கண்டு மனம் வருந்திய எட்டயபுரம் அரசன் தமிழ்ச் சான்றோர்களை அழைத்து எட்டயபுரம் சமஸ்தானம் அந்த படத்தில் மிகவும் கேவலமாக சித்தரிக்கப்பட்டதாகவும் அதை சீர் செய்யும் வகையில் தமிழறிஞர் அனைவரும் அந்த களங்கத்தை நீக்க உதவுமாறு கோரினார். இதனையடுத்து தமிழறிஞர்கள் எட்டயபுரம் சமஸ்தான புத்தக சாலையை படித்து ஆராய தங்களுக்கு அனுமதி அளிக்கும்படி கோரினர். இதை ஏற்ற அரசர், புத்தக சாலையை ஆராய அனுமதி அளித்தார்.

இதைத்தொடர்ந்து, பல நாட்கள் நடந்த ஆராய்ச்சியில் சாமி தீட்சிதர் என்பவர் 1878ஆம் ஆண்டு எழுதி வம்சிமணி தீபிகை என்கிற புத்தகமும் டபிள்யு.இ.கணபதி பிள்ளை 1890ஆம் ஆண்டு எழுதிய Ettayapuram past and present என்கிற புக்கங்களில் ஜெகவீரராமபாண்டி எட்டப்பன் என்கிற அரசனுக்கு மாவீரன் அழகுமுத்துக்கோன் தளபதியாக இருந்ததாகவும் அழகுமுத்துக்கோன் இல்லை என்றால் ஜெகவீரராமபாண்டி எட்டப்பன் இல்லை என்று அந்த புத்தகங்களில் கூறப்பட்டுள்ளது. இந்த நிகழ்வுகள் நடந்த கால கட்டம் 1750என்று கருதப்படுகிறது. இந்த குறிப்புகள் பின்னர் தினமனி நாளிதழில் கண்ணீர் விட்டா வளர்த்தோம் என்ற பகுதியில் வெளி வந்தது. இதேபோல்,1976 ஆம் ஆண்டு எட்டயபுரம் வரலாறு என்கிற புத்தகத்தில் 65 பக்கம் வீரன் அழகுமுத்துக்கோன் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், மதுரை யாதவா கல்லூரி பேராசிரியர் ‎ஷாஜகான் கனி எட்டயபுரம் அரண்மனைக்கு சென்றிருந்தபோது, அங்கு குழந்தைகளுக்கு ஆங்கில பாடம் எடுத்துக்கொண்டிருந்த ஆசிரியர், கட்டாலங்குளம் பற்றி கூறிக்கொண்டிருந்தார். அதை கேட்ட பேராசிரியர், வீரன் அழகுமுத்துக்கோன் பிறப்பிடமான கட்டாலங்குளம் பற்றி விசாரித்தார். அப்போது, இந்த ஆசிரியர் இன்றும் கட்டாலங்குளத்தில் வீரன் அழகுமுத்துக்கோன் வம்சம் இருப்பதாகவும் அவர் வாரிசாக திரு.சிவத்தசாமி என்பவர் அங்கு வசித்து வருவதாகவும் கூறினார். இத்தகைவலை அறிந்த பேராசிரியர் உடனே கட்டாலங்குளம் சென்று திரு. சிவத்தசாமியை சந்தித்து அழகுமுத்துக்கோன் வரலாறை அறிந்து கொண்டார். இச்சமயத்தில் மாவீரன் அழகுமுத்துக்கோன் புகழ் பல இடங்களில் பரவத் தொடங்கியது. இந்நிலையில், பல ஜாதியினர் அவரை சொந்தம் கொண்டாட தொடங்கினர். மாவீரன் அழகுமுத்துக்கோன் பெயரில், சில இடங்களில் சேர்வைக்காரன் என்கிற அடைமொழி குறிப்பிடப்படுவதால் அவர் தங்கள் இனத்தை சேர்ந்தவர் என்று ஓர் இனத்தவர் சொந்தம் கொண்டாடத் தொடங்கினர். வேர்வைக்காரன் என்பது ஜாதி பெயர் இல்லை என்றும் சேர்வைக்கான என்ற பெயர் ஜாதி பட்டியலில் குறிப்பிடப்படவில்லை.சேர்வைக்காரன் என்பது ஒரு பட்டம். திறமையான படைத் தளபதிகளுக்கு கொடுக்கப்படுவது சேர்வை என்கிற பட்டம் என்று வரலாற்று பேராசிரியர் தேவஆசிர்வாதம் ஓர் ஆய்வில் குறிப்பிட்டுள்ளார். படையில், சேர்மானம்மான திட்டம் வகுப்பவன் சேர்வைக்காரன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சேர்வைக்காரன் பட்டம் பெற போட்டிகள் உள்ளன. அவற்றில் வாள்வீச்சு, காளை அடக்குதல் ,மல்யுத்தம் போன்ற பல போட்டிகள் உள்ளன. இவற்றில் வெற்றி பெற்றால்தான் சேர்வைக்காரன் என்ற பட்டம் வழங்கப்படும். இதுபோல் பல போட்டிகளில் கலந்து கொண்டு வீரன் அழகுமுத்துக்கோன் வெற்றி பெற்று திருமலைநாயக்கர் அரசரிடம் சேர்வை என்கிற பட்டம் பெற்றார்.

அதேபோல், மாவீரன் அழகுமுத்துக்கோன் வம்சாவழியினர் வைத்துள்ள செப்பு பட்டையத்தில் மாவீரன் அழகுமுத்துக்கோன் பிறப்பு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், அவர் கிருஷ்ணகோத்ரம் கோபால வம்சத்தில் பிறந்துள்ளார் என்று தெரியவருகிறது. இதுவே அவர் யாதவ குலத்தில் பிறந்தார் என்பதற்கு ஆதாரம் என்று குறிப்பிடலாம். ஏனெனறால், ஐயங்கார்கள், மாதுவர்கள், நாயுடுகள், யாதவர்கள் மட்டுமே தங்கள் பெயரிலும் கோத்தரத்திலும் வைணவ சம்பிரதாயத்தை கடைப்பிடிப்பார்கள். ஆகையால், மாவீரன் அழகுமுத்துக்கோன், யாதவர் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை.
 
  Today, there have been 19837 visitors (34021 hits) on this page!  
 
This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free